search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் பாலம்"

    பாம்பன் ரெயில் பாலத்தில் வருகிற 26-ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரெயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தூக்குப்பாலம் மிகவும் பழமையாகி விட்டதால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளோம்.

    புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போது உள்ள ரெயில்வே பாலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பாதுகாப்பாக உள்ளது. எனவே அந்த பாலத்தில் வருகிற 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. #PambanBridge
    புதுடெல்லி:

    ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
    இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.

    தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
    புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.

    இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.

    இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#PambanBridge
    பாம்பன் ரெயில் பாலத்தில் கர்டர்களை தூக்கும் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் 3-வது நாளாக இன்றும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. #pambanBridge
    ராமேசுவரம்:

    மண்டபம் - ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் கடலில் 3 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாலத்தை 146 தூண்கள் தாங்குகின்றன. பாலத்தின் மத்தியில் கப்பல்கள் செல்ல வசதியாக தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை, காரைக்குடியில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு இரவு-பகலாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி நேற்று வரை முடியவில்லை.

    இந்த நிலையில் பாலத்தின் உறுதித் தன்மையை சோதிக்கும் வகையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து பாம்பனுக்கு 5 கி.மீ., 15 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனை தென்னக ரெயில்வே பாலம் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு, மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் லலித் குமார்மனுஷ்கான் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் ரெயிலை இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 3-வது நாளான இன்று பெங்களூரில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் பாம்பனுக்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் சிறப்பு ரெயில் என்ஜின் பாம்பன் பாலத்தில் இயக்கப்பட உள்ளது. அதன் பின் ரெயில்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இன்று 3-வது நாளாக பாம்பன் ரெயில் பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ராமேசுவரத்துக்கு ரெயில் மூலம் வருவார்கள். பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது மண்டபத்திலேயே ரெயில்கள் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் ராமேசுவரம் செல்கின்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. #pambanBridge
    ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #PambanBridge #BombThreat
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம், சாலை பாலம் உள்ளது.

    நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரம் வந்து செல்வதால் சாலை பாலம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கடலை பார்த்து ரசிப்பது வழக்கம்.



    இந்த நிலையில் இந்த பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசியவன், “பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்” என கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் பாம்பன் பாலம் விரைந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    போனில் பேசிய மர்ம மனிதன் பாம்பன் பாலம் என்று மட்டுமே கூறிய நிலையில் எந்த பாலம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் ரெயில் மற்றும் சாலை பாலங்களை அதிரடியாக சோதனை செய்தனர். இதன் காரணமாக பாம்பன் பாலம் பகுதியில் இன்று பரபரப்பு காணப்பட்டது. #PambanBridge #BombThreat
    ×